மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த பிரதான அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த சில வாரங்களாக அம்மாநில அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறிவந்தன.
இறுதியாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதென முடிவுசெய்து பல்வேறு சிக்கல்களைக் கடந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் அடிப்படையில், இன்று மாலை 6.40 மணிக்கு மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். சிவசேனாவை நிறுவியவரும், மராட்டிய அரசியலில் கோலோச்சியவருமான மறைந்த பால் தாக்கரேவின் குடும்பத்தில் இருந்து முதலமைச்சராகும் முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இந்த விழாவில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், மல்லிகார்ஜுன கார்கே, பிரஃபுல் பட்டேல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஸ்டாலின்!