சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, லடாக் விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறனை அதிகரிக்க இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இதன்படி, "4,500 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள தற்போதைய முனையக் கட்டடம் 19,000 சதுர மீட்டராக விரிவுபடுத்தப்படும். இதில் அனைத்தும் நவீன வசதிகளையும் கொண்ட மூன்று ஏரோபிரிட்ஜ்கள் இருக்கும். இதன்மூலம் ஆண்டுதோறும் 2.5 மில்லியன் (25 லட்சம்) பயணிகளைக் கையாள முடியும்” என்று குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான நிலைய இயக்குநர் சோனம் நூர்பூ கூறினார்.
தற்போதைய விமான நிலைய உள்கட்டமைப்பில் 480 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய நவீன முனையக் கட்டடம் சேர்க்கப்படும் என்றும், மேலும் லே விமான நிலையத்தின் புதிய முனையம் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் தயாராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கரோனாவிற்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் லே விமான நிலையம், விமான நடவடிக்கைகளை திறமையாகக் கையாண்டு வருவதையும், கரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விமான நிலைய அலுவலர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பயணிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.