டெல்லி: லாலு பிரசாத் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஜார்க்கண்ட் சிறையில் உள்ள லாலு பிரசாத்துக்கு நேற்று முன்தினம் (ஜன.22) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் அவரது உடல்நிலை சனிக்கிழமை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதய நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள லாலுவை, மருத்துவர் ராகேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.
இந்நிலையில், “லாலு பிரசாத் கடந்த இரு நாள்களாக மூச்சுவிடுவதில் சிரமப்பட்டுவந்தார். இதற்கிடையில் வெள்ளிக்கிழமை (ஜன.22) அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்தோம்” என்று மருத்துவர் காமேஸ்வர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக வெள்ளிக்கிழமை லாலு பிரசாத் உடல் நிலை திடீரென நலிவுற்ற செய்தியறிந்து அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோர் சிறப்பு விமானத்தில் மருத்துவமனை சென்றனர்.
இந்நிலையில், தனது தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறிய தேஜஸ்வி ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கும் சென்று அவரிடம் லாலு பிரசாத்வை மேல்சிகிச்சைக்காக டெல்லி அழைத்து செல்ல உதவும்படி கேட்டுக்கொண்டார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைதான லாலு பிரசாத் சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் செயலிழப்பு?