கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஒரு மாதத்தைக் கடந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவானது சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கிறது.
இந்த ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு மக்களும் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவருவதால் சில கட்டுப்பாடுகளுடன் கடந்த நான்காம் தேதி முதல் தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் ஊரடங்கால் இழந்த பொருளாதாரத்தினை மீட்க தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு தளர்வுகள் அளித்துள்ளது. அதில், தொழிலாளர்களின் பணி நேர சுழற்சியினை அதிகமாக மாற்றியமைப்பது உள்ளிட்ட மூன்று முக்கிய தொழிலாளர் சட்டங்களுக்கு மூன்றாண்டு காலம் விலக்களிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் கோஹில் கூறுகையில், “தொழிலாளர் சட்டங்கள் பொதுப் பட்டியலில் உள்ள தொழிலாளர் சட்டங்களை எவ்விதமான விவாதங்களும் இன்றி, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இல்லாமல் இடைநீக்கம் செய்ய அரசியலமைப்பின்படி யாருக்கும் அதிகாரம் இல்லை.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தொழிலாளர் சட்டங்கள் குறித்து எந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், அதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அரசால் எந்தவொரு முன்னேற்பாடும் இல்லாமல், மனிதமாண்புகள் சிறிதும் மதிக்கப்படாமல் அவசரமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், தொழிலாளர்கள் மற்றும் குடிப்பெயர்ந்தோர்பெரும் இன்னலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
உணவுப் பொருள்கள், மருந்துகளும் இல்லாமல் தவித்து வரும் இந்த நிலையில் எஞ்சியிருக்கும் அடிப்படை உரிமைகளையும் இந்த அரசு பறிக்கப்பார்க்கிறது. மேலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை அரசு கையாளுகிறது.
உழைப்புச் சுரண்டலால் மிகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொழில்துறை சீர்சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் போன்ற தொழிலாளர் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அவை அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்க்கை உரிமையை உறுதி செய்துள்ளன. பிணைக்கப்பட்ட தொழிலாளர்களாக மாற்றப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் வைத்திருக்கும் உறுதியான உத்தரவாதம் அவை.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க தொழிலாளர்கள் சுரண்டலை சட்டரீதியாக ஆதரிக்கும் வகையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய ஆகிய மாநிலங்களில் தற்போது தொழிலாளர் சட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : தொழிலாளர் சட்டங்களுக்கு விலக்கு அளித்த உத்தரப் பிரதேச அரசு