கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தினக்கூலி செய்பவர்கள், நடுத்தர குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்துவருகின்றனர். ஊரடங்கின் காரணமாக ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில், மகாராஷ்டிராதான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை தடுக்க மகாராஷ்ரா மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கரோனாவின் தாக்கம் உலகையே புரட்டிப்போட்டுள்ளது. அத்தியவசிய தேவைகள் வாங்கக்கூட வெளியே செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாக கூறும் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கிராம மக்கள், கரோனா தங்களது வாழ்வை 30-40 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
ரப்பி பருவத்தின் தொடக்கத்தில் விவசாய வேலைகளுக்காக வந்த தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை அதிகரிக்கக் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், தற்போது கரோனாவின் கோரத்தாண்டவத்தில் நாடு சிக்கி தவிப்பதால் விவசாயிகளின் நிலை முற்றிலும் மாறிவிட்டது.
சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டு, கிராமப்புறங்களில் வாகனங்கள் இயங்கவில்லை. இதனால், அத்தியவாசிய பொருள்களைக்கூட வாங்க இயலாமல் தவித்துவரும் தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியத்திற்கு பதிலாக தானியங்களை வழங்குகள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் பார்க்க: காஷ்மீர் ஊடகவியலாளர் செராவிடம் காவல் துறை விசாரணை