பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த ஜனவரி 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மாநில விலங்குகள் நலத்துறை அமைச்சர் பிரபு சவுகான் தெரிவித்திருந்தார்.
துணை சபாநாயகர் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்தனர். இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஆளும் பாஜக அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது எனக் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், மசோதாவை திரும்பப் பெற வேண்டும் அல்லது கூட்டுத் தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆனால், ஆளும் பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவித்த, மூத்த காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் இந்த சட்டம் யாருக்கும் உதவாது, விவசாயிகளுக்கோ அல்லது பொது மக்களுக்கோ உதவாது என்று கூறினார்.
மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த இப்ராஹிம், "கர்நாடகா மாநிலம் மகாராஷ்டிரா அல்லது உத்தரபிரதேசம் போன்றது அல்ல. இந்த மசோதாவில் வகுப்புவாத நிறத்தை சேர்க்க வேண்டாம். இந்த விவகாரம் குறித்து விவசாயிகளுடனும் விவாதிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்" என்றார்.