நாடு முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைச் சீராக்கும் நோக்கில் ஊரடங்கில் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், உத்தரப் பிரதேச அரசு, அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னை ராமரின் வம்சாவளி என கூறிக்கொள்ளும் அகில இந்திய சத்திரிய அமைப்பின் தலைவர் ராஜ ராஜேந்திர சிங், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
"ராமர் கோயில் கட்டப்படும் இடம் ராஜா ஹரிஷ் சந்திரா, பகீரத் ஆகியோருடன் தொடர்புடையது. அயோத்தியில் ராமரின் இருப்பைக் கண்டறிந்த சத்திரிய சமூகம் இருக்கும் வேளையில், இந்த இடத்தின் மீது பாஜக ஏன் உரிமை கோருகிறது?
தற்போது அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி அறக்கட்டளையில், எங்களுக்கு 50 விழுக்காடு பொறுப்புகளையும், பெண்களுக்காக 10 விழுக்காடு பொறுப்புகளையும் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த அறக்கட்டளையில் எங்கள் சமூகத்தினர் பெயர்கூட இடம் பெறவில்லை. பாஜக எங்களுக்கான உரிமைகளை மறுக்கிறது.
இந்த அறக்கட்டளையைத் தொடங்க பாஜகவிற்கு அதிகாரம் அளித்தது யார்? முகலாய மன்னரான ஔரங்கசீப்பை போன்று தற்போது பிரதமர் மோடி சத்திரியர்களை நடத்திவருகிறார். பாஜக அரசு எங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். ஊரடங்கில சில தளர்வுகளை அறிவித்து, சத்திரிய சமூகத்தினர் முதலில் ராமர் கோயிலின் பூமி பூஜையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். அதன் பிறகே, அடிக்கல் நாட்ட வேண்டும்” என்றார்.