மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அமித் ஷாவின் வருகையையடுத்து மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு போரட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் போராட்டத்தின்போது பாஜகவினர் சிலர் வெறுப்புணர்வைத் தூண்டும் சர்ச்சை முழக்கத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டனர். துருவா பாசு, பங்கஜ் பிரசாத், சுரேந்திர குமார் ஆகியோரை மேற்குவங்க காவல் துறை கைதுசெய்துள்ளது.
அமித் ஷாவின் பேரணியில் பங்கேற்ற இவர்கள், 'துரோகிகளைச் சுட்டுத்தள்ளுங்கள்' என்ற கோஷத்தை தொடர்ச்சியாக எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிணையில் வர இயலாத சட்டப்பிரிவின்கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த பாஜக, இது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சதிவேலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: துருக்கியில் ரஷ்ய செய்தி ஆசிரியர் கைது