புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தக்கூடாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீதிமன்றம் சென்றார். மாநில அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற முதல் ஆளுநர் கிரண்பேடிதான்.
புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாடக்கூடாது என தனிப்பட்ட முறையில் உத்தரவிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுவதற்கு கிரண்பேடி ஆட்களை வைத்துள்ளார். ஒரு மாதம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க கிரண்பேடி முயற்சிப்பதற்கான உள்நோக்கம் என்ன கிரண்பேடியின் நடவடிக்கையால் காரைக்காலில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
காரைக்காலில் கலவரம் ஏற்பட்டால் கிரண்பேடிதான் பொறுப்பேற்க வேண்டும். மத வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் செயல்படுகிறார். திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து தரிசனம் செய்வதற்கு மாநில அரசு தகுந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதை கைவிடக்கோரி பக்தர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பாக நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: சுனாமி நினைவு: கடற்கரையில் பாலூற்றி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி!