கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு யானை மட்டும் வாழ்ந்துவந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அந்த யானையை ’கிங் யானை’ என்று செல்லமாக அழைத்துவந்தனர்.
முருசவீரா மடத்தில் வசித்துவந்த இந்த யானை, 1971ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தது. இதனால் யானையின் இறுதிச்சடங்கில் அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். அதன்பின்னர், அந்த யானையின் உடல் விலங்கியல் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில், ஹூப்ளியில் உள்ள பி.சி. ஜாபின் கல்லூரிக்கு மருத்துவப் பேராசிரியர்கள் அதன் உடலைக் கொண்டுவந்தனர்.
யானையின் உடலை உடற்கூறாய்வு செய்து, அதன் எலும்பு கூடை ஹூப்ளியில் உள்ள அக்கல்லூரியின் அருங்காட்சியகத்தில் வைத்தனர். தினமும் இதனைப் பலர் பார்வையிட்டு, கிங் யானையின் வரலாறுகளை தெரிந்துகொண்டு செல்கின்றனர்.
’யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்ற பழமொழிக்கேற்ப, இறந்த கிங் யானை இறந்து 49 ஆண்டுகளான பின்னும்கூட, அறிவியல் படிக்கும் மாணவர்களுக்குப் பயனளித்துவருவதாக ஹூப்ளி நகர மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:'உயிர் காத்த யானைகள்'... 5 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்த பிகார்வாசி!