ஹைதராபாத்: முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆந்திரா முன்னாள் அமைச்சர் பூமா அகிலோ பிரியாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்று இரவு ஹைதராபாத்தில் இருக்கும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் உறவினரும், முன்னாள் பேட்மிண்டன் வீரருமான பிரவீன் குமாரின் இல்லத்திற்கு வந்த 15 பேர், தாங்கள் வருமான வரித்துறை அலுவலர்கள் என்று கூறி திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரவீன் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் செல்போன், லேப்டாப்களை பறித்துக்கொண்டும், சில பத்திரங்களில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டும் அவர்களை வீட்டிலுள்ள ஓர் அறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து, பிரவீன் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் காவல் ஆணையர் அஞ்சனி குமாரிடம் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் அவர்கள் வருமான வரித்துறையினர் அல்ல என்பதும், மூவர் கடத்தப்பட்டதும் உறுதியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும், நர்சிங்கி பகுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் பூமாவிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தலைமறைவாகியுள்ள அவரது கணவரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்துவருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கரோனா வைரஸ்