மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் அம்மாநில பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 18) ரைசன் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நான்காவது உழவர் நலத்திட்டம் மாநாட்டின்போது விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது.
விவசாயிகளுக்கு நிவாரணம்
காரீஃப் பயிர் இழப்புக்கு ஆளான 35.5 லட்சம் விவசாயிகளுக்குப் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,600 கோடி நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மட்டங்களிலும் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து விளக்கப்படும். இதில் பிரதமர் நரேந்திர மோடி மதியம் 2 மணிக்கு காணொலி வாயிலாக சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அமைச்சர்கள் நிவாரண தொகையைப் பின்னர் வழங்குவார்கள். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாநாடு நடைபெற உள்ளது.
காரீஃப் பயிர் இழப்பு என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் காரீஃப் பருவத்தில் நெல் உள்ளிட்ட பயிர்கள் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தொடக்கத்தில் பயிர் விதைப்பில் தொய்வு ஏற்பட்டது.
பருவநிலை மாற்றம், எதிர்பாராத வகையில் புதிய வகை பூச்சிநோய் தாக்குதல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றினால் பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டு அதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்குப் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்கப்படும்.