கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஜாகப் என்ற ராஜன். இவரின் மகன் கெவின் ஜோசப். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நீனு சாக்கோவை காதலித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். கெவின் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு இருவரும் திருமணத்தை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே, கெவினை காந்திநகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கும், நீனுவை விடுதிக்கும் அவரது பெற்றோர்கள் அனுப்பிவைத்துள்ளனர். காந்திநகரில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து கெவினும், அவரது உறவினரான அனிஷீம் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர், அனிஷ் விடுவிக்கப்பட்ட நிலையில், கெவின் இறந்த நிலையில் தென்மலா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தது. நீனுவின் தந்தை, சகோதரர் உள்பட 14 பேர் குற்றவாளிகள் என முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது. நீனுவின் தந்தை உட்பட நான்கு பேருக்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், நீனுவின் சகோதரர் உட்பட மீதமுள்ள 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ .40,000 அபராதமும் விதித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இந்தக் கொலைக்கு காரணம் இன ரீதியான வேறுபாடு என குறிப்பிட்டு, இது ஆணவக் கொலை என்பதை நீதிமன்றம் ஒத்துக்கொண்டுள்ளது.