துபாயிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள துாதரகத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் வந்த பார்சலில், தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, துாதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கை, தேசிய புலனாய்வுத் துறை, சுங்கத் துறை, அமலாக்கத் துறையினர் இணைந்து விசாரித்து வருகின்றனர்
கிடைத்த தகவலின்படி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல், கேரள உயர் கல்வித் துறை அமைச்சரான ஜலீல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயரில், முஸ்லிம்களின் புனித நூலான குரானை இறக்குமதி செய்து அதை, தன் தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது. ஆனால், குரான் வந்ததாகக் கூறப்படும் பார்சல்களில், குரான் தவிர, தங்கமோ அல்லது வெளிநாட்டுப் பணமோ கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, அமைச்சரை அமலாக்கப் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், அதில் அமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இப்பிரச்னை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பல இடங்களில் வன்முறை சம்பவங்களால் போர்க்கள பூமி போல் கேரளா காட்சியளித்தது.
இந்நிலையில் இன்று, காலை 6 மணியளவில் தனி வாகனத்தில் தேசிய புலனாய்வு துறையின் அலுவலகத்திற்கு அமைச்சர் ஜலீல் வருகை தந்தார். அவரிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.