இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கரோனா பரவலை கேரளா கட்டுக்குள் கொண்டுவந்தது.
ஆனால், அம்மாநிலத்தின் தற்போதைய நிலைமையே வேறு. கடந்த ஒரு மாதங்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கட்டுங்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்த பெரும்பான்மையானவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுவந்தது. அதுமட்டுமில்லாமல், ஒருசிலருக்கு தொற்று எப்படி பரவியது, யாரால் பரவியது என்று கண்டுபிடிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது கரோனா பரவல் மூன்றாம் கட்டத்திற்கு சென்றுவிட்டதாக முதலமைச்சர் பினரயி விஜயன் அறிவித்தார். அபாயகரமான கட்டத்தில் மாநிலம் இருப்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
அரசு சார்பில் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் மக்களிடையே கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தாலும், ஒருசில தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கிருஷ்ணகுமார்.
கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஆரம்பத்தில் ஃபிளக்ஸ் போர்டு அச்சடித்தல் தொழில் செய்துவந்திருக்கிறார். அந்த தொழிலில் போதுமான வருமானம் கிட்டாததால், வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள லாட்டரி விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியுள்ளார்.
இதனிடையே, மாநிலம் முழுவதும் கரோனா தொற்று பரவியது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்கள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாததுமே அதற்கு காரணமாக கூறப்பட்டது.
இதனால் மாநிலம் முழுவதும் இல்லாவிட்டாலும், தான் வசிக்கும் பகுதியிலாவது கரோனா குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி, தொற்று பரவலைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
அதன்படி, சுவர்களில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுத முடிவெடுத்துள்ளார். அதற்காக தான் லாட்டரி விற்று சேர்த்து வைத்திருந்த பணத்தைப் பயன்படுத்த திட்டமிட்டார்.
அந்த பணத்தைக் கொண்டு பெயிண்ட், பிரஸ் ஆகியவற்றை வாங்கி, அதற்கான வேலையில் இறங்கியிருக்கிறார். பெரும்பாலான இடங்களிலுள்ள சுவர்களில் "முகக்கவசம் அணியுங்கள்", "தகுந்த இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்" போன்ற வாசகங்களை எழுதி முடித்துள்ளார். இதை அனைத்தையும் தனி ஒரு நபராக நிகழ்த்தி காட்டியுள்ளார் கிருஷ்ணகுமார்.
மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரின் ஆசை என்றாலும்கூட அவருக்கு கிடைக்கும் சொற்ப வருமானம் அதற்கு பெரும் தடையாக இருக்கிறது.
இருப்பினும், தன்னால் இயன்ற அளவுக்கு இதேபோன்று செயல்பட உறுதிபூண்டுள்ளார். தனி ஒரு நபராக கரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் கிருஷ்ணகுமாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்து-இஸ்லாமிய குடும்பங்களை உறவுகளாக மாற்றிய கோவிட்-19