நிர்பயா தினத்தை நினைவுகூரும் வகையில், வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி இரவு 1 மணி தொடங்கி டிசம்பர் 30 வரை நடைபெறவுள்ள இந்த ’நைட் வாக்’ நிகழ்ச்சி, கேரள மாநிலத்தில் முன்கூட்டியே தெரிவு செய்யப்பட்ட 100 நகரங்களில் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கேரள மாநில சமூக நீதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, "பொதுவெளி என்பது பெண்களுக்கானதும்தான் என்பதை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு 200 மீட்டர் தொலைவிற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு உதவுவார்கள். குற்ற நிகழ்வுகளைத் துப்பறிய உதவும் ’க்ரைம் மேப்பிங்’ எனப்படும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் காவல் துறையினராலும் இந்த நைட் வாக் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கண்காணிப்புக் கருவிகள், தெருவிளக்குகள் ஆகியவை சரியாக இயங்குகின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின்போது பெண்களிடம் எவரேனும் தவறாக நடந்துகொள்ள முற்பட்டால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இதுபோன்று நைட் வாக் நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர், இரவு நேரங்களில் வெளியே செல்ல பெண்கள் மத்தியில் வெளிப்படும் பொதுவான பயம், கவலை, தயக்கங்கள் ஆகியவற்றை போக்குவதே இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் என்றும் அதே நேரத்தில் பெண்களிடம் தவறாக நடக்க முற்படுபவர்களையும் காவல் துறையினர் அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ள இது உதவும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: பழங்குடியாக மாறி நடனமாடிய ராகுல் காந்தி!