கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கில் முன்னாள் தூதரக அலுவலர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் ஆகியோரிடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கருடன், ஸ்வப்னா சுரேஷ் மூன்று முறை ஐக்கிய அரபு அமீரகம் சென்றது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை, வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ், பிணைகோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு ஆகஸ்ட் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 'தங்கக் கடத்தல் தொடர்பான விசாரணை இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதால், ஸ்வப்னாவுக்கு பிணை வழங்க முடியாது' எனக் கூறிய கொச்சி நீதிமன்றம், அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது , கடந்த 60 நாட்களாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷிற்கு பிணை வழங்கப்பட்டது. தேசிய புலனாய்வு முகமையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலில் ஸ்வப்னா இருப்பதால், பிணை வழங்கப்பட்ட போதிலும், அவரால் சிறையில் இருந்து வெளிவரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள தங்கம் கடத்தல் வழக்கு: என்ஐஏ அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் ஜலீல்!