உலகளாவிய அச்சுறுத்தலான கரோனா தொற்றுக்கு தற்போது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனிடையே, யோகா குரு ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், "கரோனா வைரஸ் தொற்றை 100 விழுக்காடு குணப்படுத்தும்" மருந்தென கூறி ஆயுர்வேத கிட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சில நாள்களிலேயே வேறு சில நிறுவனங்களும் ஆயுர்வேதம் மருந்துகளை விளம்பரப்படுத்தி வருவதாக அறிய முடிகிறது. இந்நிலையில், பதஞ்சலி உள்ளிட்ட மருந்து நிறுவனங்களுக்கு எதிரான பொது நல வழக்கு ஒன்று, கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 27) தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "கேரளாவில் சில நிறுவனங்கள் பாரம்பரிய மரபு மருத்துவமான ஆயுர்வேதத்தில் முறைப்படி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. சில நிறுவனங்கள் ஆயுர்வேத மருந்துகளை வணிகமாக மாற்றி உள்ளன. அவை லாபத்தை எண்ணி முறையற்ற வகையில், சோதனைக்குட்படுத்தாது, மனித வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கவும் செய்கின்றன.
நீரிழிவு மற்றும் கல்லீரல் தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சையளிப்பதாக கூறும் சில முக்கிய ஆயுர்வேத நிறுவனங்கள் விற்பனை செய்யும் மருந்துகளில் அதிக அளவு ஹெவி மெட்டல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மருந்துகள் 85 விழுக்காடு பாதரசம் கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மருந்தின் தரத்தை சரிபார்த்து, விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கும் போதைப்பொருள் ஆய்வாளர்கள், தனியார் நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்று தரம் குறைந்த இவற்றை விற்பனை செய்ய அனுமதித்துள்ளனர்.
எனவே, கோவிட்-19 தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சொல்லும் நிறுவனங்கள் அவற்றின் ஆய்வு அறிக்கைகளை விளக்க வேண்டும். 100 விழுக்காடு தீங்கற்றது என்பதை நிறுவ வேண்டும். முறையற்ற ஆயுர்வேத மருந்து நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆயுர்வேத மருத்துவர்கள் ஜெயா வி தேவ், கவிதா கிரிஷ், ஸ்ரீதர் எம் எச் மற்றும் ஆயுர்வேத துறையின் முன்னாள் துணை ஆய்வாளர் திருவனந்தபுரம் பி ஜான் ஆகியோரை எதிர்த்தரப்பினராக இணைத்துள்ள நீதிமன்றம், அவர்களது கருத்துகளை அறிக்கையாக சமர்பிக்க உத்தரவிட்டது.