காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தான் வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதியோடு சேர்த்து கூடுதலாக தென்னிந்தியாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துவந்தன. இத்தகவலை இன்று அக்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியோடு கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி, "ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.ஷானவாஸ் கடந்த இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு அவரது மரணத்திற்குப் பிறகு அந்த தொகுதி காலியாக உள்ளது. பொதுவாக இந்த தொகுதியில் காங்கிரஸ் பலம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அமேதி தொகுதியில் தோல்வியுறுவார் என்ற பயத்தில் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறாரா என அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
வயநாடு தொகுதியல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இடதுசாரிகளே பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். அங்கு பாஜவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்பது கள யதார்த்தம். இதனால் இடதுசாரிகளும் ராகுலின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசுகையில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது கேரளாவில் பாஜகவைவிட இடதுசாரிகளை எதிர்ப்பதிலேயே அக்கட்சி முக்கியத்துவம் செலுத்துவது தெரிகிறது.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், கேரளாவிலுள்ள 20 தொகுதிகளில் அவரும் போட்டியிடுகிறார். இதில் எந்த வேறுபாடும் இல்லை. பாஜக போட்டியிடும் தொகுதியில் அவர் போட்டியிட்டிருக்க வேண்டும். இது இடதுசாரிகளுக்கு எதிரான போராட்டமே தவிர வேறொன்றுமில்லை. அவரை கண்டிப்பாக தோற்கடிப்போம். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் ஆகியவற்றை நம்பி ராகுல் காந்தி வெற்றிபெற பாதுகாப்பான தொகுதியாகவே வயநாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.