மும்பையில் சிக்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய அரசு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ரயில் மும்பையிலிருந்து புறப்பட்ட பின்பே கேரள அரசுக்கு இது குறித்த தகவலை மத்திய அரசு அளித்துள்ளது
இது குறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், "மத்திய அரசு கேரளாவுக்கு இயக்கிய ரயில் குறித்து முன்னரே எவ்வித தகவலும் அளிக்கவில்லை. ரயில் நிறுத்தும் இடங்கள் குறித்தும் சரியாக திட்டமிடவில்லை. அந்த ரயிலில் வந்த பயணிகளில் பெரும்பாலானோர் அனுமதிச்சீட்டு எடுக்கவில்லை. இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடப்பதைத் தவிர்த்துவிட்டு பொறுப்புடன் மத்திய அரசு நடக்கவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், மும்பையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க கேரள அரசு அக்கறை காட்டவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சிறப்பு ரயில்கள் ஒதுக்கப்படுவதற்கு முன்னர் மாநில அரசுக்கு மத்திய ரயில்வே தகவல் அளித்திருக்கவேண்டும். கரோனா தொற்று அதிகம் பாதித்த இடங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க நாங்கள் விரும்புகிறோம்.
எங்கள் ஒரே வேண்டுகோள் என்னவென்றால் சிறப்பு ரயில்களில் வரும் பயணிகள் கேரள அரசின் இணையதளத்தில் தங்களது தகவல்களைப் பதிவு செய்யவேண்டும். அதற்காக பயணிகளின் விவரங்களை மத்திய அரசு வழங்கவேண்டும். அந்த தகவல்களை வைத்து பயணிகளின் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள போதுமான வசதி உள்ளதா அல்லது அவர்களுக்கு தனிமைப்படுத்தும் வசதி ஏற்படுத்தித் தரவேண்டுமா என்பதை நாங்கள் கண்டறிய விரும்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: குடிபெயர் தொழிலாளர் விவகாரம்; ரயில்வே அமைச்சர் - மகாராஷ்டிரா அரசு மோதல்