கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக, உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு நாடுகளிலும் வேலை செய்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கினர்.
தற்போது இவர்களை மீட்பதற்காக அமெரிக்கா, சவூதி அரேபியா, கத்தார், குவைத், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசால் 64 சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் நேற்று இரவு அபுதாபி மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த 363 இந்தியர்கள் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கும் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்திலேயே இவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டன.
அதில் அபுதாபியில் இருந்து வந்த 181 பயணிகளில் ஐந்து பேருக்கு கரோனா அறிகுறி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த 5 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள அனைவரும் அவரவர்களின் மாவட்டங்களில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சிறப்பு விமானம் மே 7ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரையில் செயல்பட்டு, பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள 15 ஆயிரம் இந்தியர்களை அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் மோதி வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு: மோடி இரங்கல்