தலைநகர் டெல்லியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், டெல்லி அரசு மருத்துவமனைகளில் டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வரும் சூழலில் கெஜ்ரிவாலின் இக்கருத்து கடும் கண்டனங்களை சந்தித்தது.
இதையடுத்து, டெல்லி அரசின் இந்த உத்தரவுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தடை விதித்தார். கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற வரும் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதன்பின்னர் காணொலி மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லையென்றும் துணை நிலை ஆளுநரின் உத்தரவு கடைபிடிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்தை விமர்சித்த உத்தரப் பிரதேச அமைச்சர் சித்தார்த்நாத் சிங், " அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவெடுக்கும் செயல்முறை அவரது சொந்த வார்த்தைகளை விழுங்குவதற்கு ஒத்ததாகும். அவர் எதையாவது தீர்மானிக்கிறார், பின்னர் அதை எந்த நேரத்திலும் மாற்றியமைக்கிறார். அதற்காக அவர் மன்னிப்பும் கேட்கிறார்" என்றார்.