இது தொடர்பாக ஈடிவி பாரத்துடன் பேசிய டெல்லி பாஜக மாநில தலைவர் ராஜேஷ் குப்தா, "டெல்லியில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனை மாநில அரசு விரைவில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க இயலாதவர், முதலமைச்சர் பதவியில் இருக்க தகுதியற்றவர்.
இந்த வைரஸ் தொற்றைச் சரியான முறையில் கையாள முடியவில்லை என்றால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலைக் கையாள்வதில் டெல்லி அரசு மோசமாகச் செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கடுமையாகச் விமர்சித்துள்ளது. மருத்துவமனைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதாக வெளியாகும் காணொலிகள் அரசாங்கத்தின் மனிதாபிமானத்தை கேள்வி கேட்கும் விதமாக அமைந்துள்ளது.
களத்திற்கு வராமல், கள நிலவரம் தெரியாமல் முதலமைச்சர் குளிர்சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு தனது பணிகளை மேற்கொள்கிறார். நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு , டெல்லியில் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், பரிசோதனை எண்ணிக்கையை ஏழாயிரத்திலிருந்து ஐந்தாயிரமாகக் குறைக்கக் காரணம் என்ன, என்று கேள்வி எழுப்பியுள்ளது" என்றார்.
நாடு முழுவதும் கரேனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் டெல்லியில் மட்டும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.