கரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் காலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நாட்டை பழைய நிலைக்கு மாற்றிடவும் மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்கள், செவிலியர், மருத்துவமனை ஊழியர்கள், துப்புரப் பணியாளர்கள் என அவர்களுடன் தொடர்பில் உள்ள யாருக்கேனும் நோய்த் தொற்று ஏற்பட்டு, அதனால் அந்த நபர் உயிரிழக்க நேருமாயின் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.