கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்துவருகின்றன. பெருந்தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் உலக விஞ்ஞானிகள் திணறிவருகின்றனர்.
இருப்பினும், நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறை அளிக்கப்பட்டுவருகிறது. குணமடைந்த நோயாளிகளின் ரத்தத்திலிருந்து கரோனா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளிகளின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. குணமடைந்து 14 நாள்கள் ஆன பிறகு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மைாவை தானம் செய்ய முன்வரலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளின் பிரச்னையை பிளாஸ்மா வங்கி தீர்க்கும்.
குணமடைந்தவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்தால் இந்த நடவடிக்கை வெற்றி பெரும். தானம் செய்ய முன்வருபவர்கள் 1031 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 8800007722 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யலாம்.
18 முதல் 60 வயதானவர்கள் 50 கிலோ எடைக்கு மேல் இருந்தால் தானம் செய்யலாம். புற்றுநோயாளிகள், கர்ப்பிணி, உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்றவற்றில் பிரச்னை உடையவர்கள் தானத்தை மேற்கொள்ளக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: 'இதையே பிள்ளையாரும் விரும்புவார்' - பிளாஸ்மா தான முகாமுக்கு ப. சிதம்பரம் பாராட்டு