ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வருகின்ற 19ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ப. சிதம்பரம் தனது 74ஆவது பிறந்தநாளான இன்று சிறையில் இருந்துவருகிறார்.
இந்நிலையில், தனது தந்தை சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமான கடிதம் ஒன்றை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ளார்.
அதில், இன்று 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் உங்களை எந்த 56 இன்ச்சும் (மோடியை குறிக்கும் வகையில்) நிறுத்த முடியாது என்றும் வீட்டில் நீங்கள் இல்லாதது குடும்பத்தினரின் இதயத்தை நொறுக்கியுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். நீங்கள் வீடு திரும்பியவுடன் கேக் வெட்டி கொண்டாடலாம் எனவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், விக்ரம் லேண்டர் தரையிறங்காமல் போனபோது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு மோடி ஆறுதல் கூறிய நிகழ்வை குறிப்பிட்டுள்ள அவர், 40 நாட்களுக்கும் மேலாக காஷ்மீர் முடங்கியிருந்த நிலையில், அங்கு விளையும் ஆப்பிள்களை நேரடியாக கொள்முதல் செய்வது அரசு அறிவித்ததையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
மேலும், ப. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தனது கடிதத்தில் தொகுத்துள்ள அவர், தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் நாடகங்களுக்கு எதிராகப் போராடி உண்மையின் துணையுடன் வெளிவருவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.