கரோனா வைரஸ் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகள் மூன்று மாதங்களுக்கு மேலாக தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து வசதிகளின்றி மக்கள் சிரமமடைந்தனர்.
இதனிடையே சில வாரங்களுக்கு முன்னதாக விமான போக்குவரத்துகள் மட்டும் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டன. இந்நிலையில் கர்நாடகாவிலிருந்து ஆந்திராவுக்கு பேருந்து வசதிகள் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு சார்பாக பேசுகையில், ''கர்நாடகாவிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் பேருந்து வசதி தொடங்கப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக பெங்களுரூவிலிருந்து ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர், ஹிந்துபூர், கட்ரி, புட்டர்பர்தி, கல்யாணதுர்கா, ராயதுர்கா, கடப்பா, மந்த்ராலயா, திருப்பதி, சித்தூர், மதனபள்ளி, நெல்லூர், விஜயவாடா பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் தொடங்கப்படவுள்ளன.
இதேபோல் இரண்டாம் கட்டமாக பெல்லாரியிலிருந்து விஜயவாடா, அனந்தப்பூர், கர்னூல், மந்த்ராலயா பகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக ராய்ச்சூரிலிருந்து மந்திராலயாவுக்கும், நான்காம் கட்டமாக ஷாப்பூர்இலிருந்து மந்த்ராலயா, கர்னூல் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதிகள் தொடங்கப்படவுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகள் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.