கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவையானது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதலே காங்கிரஸ்-பாஜக இடையே வார்த்தை போர் நிலவியது. இதனால் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா விதித்திருந்த 1:30 மணி கெடு வரையிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி ஆளுநரிடம் பாஜக எம்எல்ஏக்கள் முறையிட்டனர். அதன்படி, மாலை ஆறு மணிக்கு முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் இரண்டாவது கெடு விதித்தார்.
ஆளுநரின் இந்த கெடு சட்டவிரோதமானது என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வரன், "நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள கொறடா உத்தரவு பிறப்பிப்பது அரசியல் கட்சிகளின் உரிமை. மேலும், சட்டப்பேரவை கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போது அவைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த இரண்டு பிரச்னைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, உங்களை (சபாநாயகர்) நாங்கள் மதிக்கிறோம். ஆளுநரின் உத்தரவுப்படி இன்றே வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இரவு எத்தனை மணியானாலும் பரவாயில்லை எங்கள் எம்எல்ஏக்கள் காத்திருப்பார்கள். இது ஆளுநரின் உத்தரவுக்கு நாம் அளிக்கும் மரியாதை" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, அவையை வரும் திங்கட்கிழைக்கு (ஜூலை 22ஆம் தேதி) ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.