கர்நாடகா சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. 105 எம்எல்ஏக்களுடன் முன்னிலை வகிக்கும் பாஜக, புதிய அரசை அமைப்பது குறித்து மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோலி (Ramesh Jarkiholi), மஹேஷ் குமதஹலி (Mahesh Kumathahalli), சுயேட்சை எம்எல்ஏ ஆர்.சங்கர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.
ராஜினாமா கடிதங்கள் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியும், மூவரும் எந்த பதிலும் அளிக்காததால் இந்த முடிவை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, இந்த ஆட்சி முடியும் வரை அவர்களால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் கூறினார்.
மேலும், குமாரசாமி அரசு கவிழ்வதற்குக் காரணமாக இருந்த மற்ற 14 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது குறித்து ஆய்வு செய்ய தனக்கு நேரம் வேண்டும் என ரமேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
சபாயநாகரின் இந்த தகுதி நீக்க முடிவால், கர்நாடகா சட்டப்பேரவையின் எண்ணிக்கை 225 இருந்து 222ஆக குறைந்துள்ளது.