நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கரோனாவின் கோரத் தாண்டவத்தில் சிக்கித் தவித்து வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீ ராமலுவுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டேன். அதில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் அனைத்து துறைகளும் கரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.
கரோனா தொற்று ஆரம்ப காலத்திலிருந்தே பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தேன். இதன் காரணமாக நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன். தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.