கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது மகளுக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “மருத்துவ சிகிச்சைக்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். முதலமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது. நாங்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எடியூரப்பாவின் மகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையும் மற்றொரு அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது.
முன்னதாக, எடியூரப்பா பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “எனக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, நான் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.
சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். அனைவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை அங்கு இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 73 ஆயிரத்து 227 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,412 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி!