கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில், புதிய அரசு அமைந்தது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
முன்னதாக, 17 சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 225லிருந்து 208 ஆனது. அதன்படி, பெரும்பான்மையை நிரூபிக்க 104 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. (அவைத் தலைவர் நீங்கலாக)
ஆனால், பாஜகவிடம் 105 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதன்படி, பார்த்தால் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வது உறுதி எனத் தெரிகிறது.