கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்), கூட்டணி கடந்த ஜூலை மாதம் பெருபான்மை இல்லாததால் ஆட்சியை இழந்தது. அப்போது இரு கட்சிகளின் 15 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தும், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதித்தும் சபாநாயகர் உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதானால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஷ்வர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்தத் தலைவரும் அம்மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினருமான ரிஸ்வான் அர்ஷத், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முன்னேற்பாடுகள், யுக்திகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னதாக அவர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு பிறகு நடக்கும் காங்கிரஸின் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இடைத்தேர்தல் தொகுதிகளான சிவாஜிநகர், கிருஷ்ணராஜப்பெட், மகாலக்ஷமி, விஜயநகர், சிக்கபல்லூர், அத்தனி, கக்வாத், கோக், எலப்பூர், ஹிரிகிரூர், எஷ்வந்தப்பூர், ஹுன்சர், கே.ஆர். பூரா, ரனிபென்னூர், ஹொஸக்கோட்டி உள்ளிட்ட பகுதிகளில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.