அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரத் திட்ட (ஏ.எஸ்.ஹெச்.ஏ.) பணியாளர்களை ஆஷா ஊழியர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். இந்த ஊழியர்கள் கரோனா தடுப்புப் பணியில் முழு உடற்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி தொடங்கி தற்போதுவரை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதில், இந்த ஊழியர்களின் ஊதியத்தை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்துதல், பிபிஇ கவச உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சிவமோகா மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆஷா திட்ட ஊழியர்கள் கூறுகையில், “அரசு எங்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அலட்சியம் காட்டுகிறது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத நிலையிலும் ஓய்வின்றி உழைத்தோம். ஆனால், எங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய்தான் ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. எங்களின் மதிப்பூதியத்தை 12 ஆயிரமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து ஆஷா திட்ட ஊழியர் பிரேமா கூறுகையில், “அரசு அலுவலர்கள் எங்கள் வேலையைப் பாராட்டுகிறார்கள். எங்களை உற்சாகப்படுத்த கை தட்டி, மலர்களைத் தூவுகிறார்கள்; அதே வேளையில் எங்கள் கோரிக்கைகளை மட்டும் கேட்க மறுக்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க:பிபிஇ கிட் ஏற்றுமதி விண்ணப்பங்கள் ரத்து... புதிய நிபந்தனைகள் வெளியீடு!