கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14ஆம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றனர். அதற்கு மத்திய அரசின் பிரதிநிதிகள் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துவருகின்றனர்.
இருப்பினும், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கில் ஏற்பட்ட இறப்புகள், எல்லைப் பிரச்னை, பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை, உழவர் தற்கொலைகள், பொருளாதாரம் குறித்து எழுப்பப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு மத்திய அரசு தரவுகள் இல்லை எனக் கூறிவருகிறது.
நேற்றைய கேள்வி பதில் நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த உழவர் (விவசாயிகள் - விவசாயக் கூலித் தொழிலாளர்கள்) தற்கொலைகள் குறித்து நம்பகமான தரவுகள் அடிப்படையிலான தகவல்கள் எதுவும் இல்லையென மத்திய அரசின் உள் துறை இணையமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்ட திமுக எம்.பி. கனிமொழி, "என்.டி.ஏ. = தரவு எதுவும் இல்லாத அரசு. எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தரவு இல்லை என்பதே தற்போதைய மத்திய அரசின் புதிய சலசலப்பு வார்த்தையாக மாறி இருக்கிறது. நோ டேட்டா, நோ டேட்டா சர்க்கார்" என விமர்சித்துள்ளார்.