இமாச்சல் பிரதேசம் தர்மஷாலா பகுதியில் உற்பத்தியாகும் கங்க்ரா தேயிலை உலகளவில் புகழ்பெற்றது. இந்தத் தேயிலை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், நாட்டில் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தேயிலை பறிப்பதிலும், ஏற்றுமதி செய்யப்படுவதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கங்க்ரா தேயிலை தொழிற்சாலை மேலாளர் அமன்பால் சிங் கூறுகையில், "ஊரடங்கால் பணியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, தேயிலை இலைகள் பறிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு கடந்த மார்ச் 20ஆம் தேதி தேயிலை உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆனால், மார்ச் 24 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தொடர்ந்து தொழிற்சாலை, தேயிலைத் தோட்டம் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, தேயிலை பதப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு மாநில அரசு அனுமதியளிக்க கோரிக்கை வைத்திருந்தோம்.
தேயிலை நிர்வாகத்தின் பரிசீலனையை ஏற்ற அரசு, மார்ச் 30ஆம் தேதி சில விதிமுறைகளுடன் அனுமதி அளித்தது. அதாவது, தொழிற்சாலைகள், தோட்டத்தில் கண்டிப்பாக 50 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். அரசின் நெறிமுறைகளை பின்பற்றி தேயிலை பணி முடிவு பெற்று கொல்கத்தாவிற்கு தற்போது கங்க்ரா தேயிலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகளவில் ஏற்றுமதி நடைபெறும் ஐரோப்பா முற்றிலுமாக மூடப்பட்டிருப்பதால் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவால் பாழாகும் முந்திரி!