கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மருத்துவர் கஃபில் கான் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, பிணையில் வெளிவந்துள்ள கஃபில் கான், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கஃபில் கான் இரையாகியுள்ளதாக கருத்துகள் பரவிவரும் நிலையில், அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. பரபரப்பான அரசியில் சூழ்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு அவர் சென்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மற்றொரு வழக்கில் கைது செய்து என்னை சிறையில் அடைப்பதற்குள் நான் ஜெய்ப்பூருக்கு வந்துவிட்டேன். எனது கடினமான காலத்தில், பிரியங்கா காந்திதான் எனக்கு ஆதரவாக இருந்தார். மதுரா சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, என்னிடம் தொலைபேசி மூலம் அவர் தொடர்புகொண்டு பேசினார்" என்றார்.
பல்வேறு கட்சித் தலைவர்கள் கஃபில் கானை தொடர்பு கொண்டு, தங்கள் கட்சியில் இணையும்படி அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானுக்கு அவர் சென்றுள்ளார். கஃபில் கான் சிறையிலிருந்து வெளிவருவதில் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை குழுத் தலைவர் பிரதீப் மாதூர் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சியின் மூத்தத் தலைவர்களின் ஆலோசனைப் படி, சிறையிலிருந்து கஃபில் கானை விடுவிக்க மதுரா, அலிகார் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வந்தேன். அவரை நான் ராஜஸ்தானுக்கு அழைத்து வந்தேன். காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் எந்த உணவுகளை சாப்பிடலாம்? மருத்துவரின் அட்வைஸ்!