டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரம்ஜால் மீனா(33). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், அப்பல்கலைக்கழகக்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான இளங்கலை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரம்ஜால் கூறுகையில், ரஷ்யா போகவேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் கனவாக உள்ளது. எனவே, அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு இங்கு பிஏ ரஷ்ய மொழி படிக்கவுள்ளேன்.
சிறுவயதிலிருந்தே நான் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தேன். வகுப்பில் முதல் மாணவனாகவும் திகழ்ந்தேன். 2000ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த பின், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில பிஎஸ்சி படிக்க சேர்ந்தேன். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக முதல் ஆண்டிலேயே படிப்பை நிறுத்திவிட்டு கூலித்தொழிலாளியான என் தந்தைக்கு உதவ சென்றேன்.
இடைப்பட்ட காலத்தில் எனக்கு திருமணமும் நடைபெற்று, தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை படிப்பையும், முதுநிலை படிப்பையும் முடித்துள்ளேன்.
கடந்த 2014ஆம் ஆண்டு, இப்பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணியில் சேர்ந்தேன்.
எனது சகோதரியின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்கும் பெறுப்பு, குடும்ப சுமை ஆகியவை படிப்புக்கு தடையாக இருந்தது, என்றார்.