உலகமே கரோனா வைரஸ் பாதிப்பால் திண்டாடிவருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் திணறிவருகின்றனர்.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பால கிருஷ்ணாவும், பாபா ராம்தேவும் கரோனாவைக் குணப்படுத்தும் மருந்து (கரோனா கிட்) என்று கூறி ’கரோனில்’, ‘சுவாசரி’ என்ற இரண்டு மருந்துகளை அறிமுகப்படுத்தினர். இது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக், ''இறுதி அனுமதிக்கு முன்னதாக பதஞ்சலி நிறுவனம் கரோனில் மருந்திற்கு விளம்பரம் செய்திருக்கக் கூடாது. கரோனில் தொடர்பான அனைத்து விவரங்களையும் வாங்கியுள்ளோம். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.
தற்போது இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலச் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா, ''கரோனா வைரஸ் விவகாரத்தில் மத்திய அரசின் வழிக்காட்டுதல்களைப் பின்பற்றிவருகிறோம். மத்திய அரசு பதஞ்சலி நிறுவனத்தின் கரோனில் மருந்திற்குச் சான்று கொடுக்கும்வரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனுமதிக்கப்படாது. அந்த மருந்தை வைத்து கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட யார் மீதும் பரிசோதனையும் செய்ய மாட்டோம்'' என்றார்.
இதையும் படிங்க: பதஞ்சலி சர்ச்சை: 100 விழுக்காடு தீர்வு; ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் உறுதி!