இந்தியாவின் மிக முக்கிய இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே, இந்தியாவுக்கு ஆதரவான முடிவுகளை எடுத்துவந்த இந்த அமைப்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கிலாபத் இயக்கத்தை முன்னின்று நடத்தியது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்ததால், இதிலிருந்து ஒரு பகுதி பிரிந்து பாகிஸ்தான் ஆதரவு அமைப்பாக மாறியது. பின்னர், அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்த அமைப்பின் தலைவர் மகமூத் மதானி கூறுகையில், "காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நாட்டின் பாதுகாப்பிலும் இறையாண்மையிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இந்தியா எங்கள் நாடு.
இந்திய இஸ்லாமியர்கள் இந்திய நாட்டுக்கு எதிரானவர்கள் என சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் கட்டமைக்க முயற்சிக்கிறது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம்" என்றார்.