ராஜஸ்தான் மாநிலம் பிரம்மபூரி பகுதியில் அஷ்பக், முன்னா, அபித் உள்ளிட்ட நான்கு பேர் சீட்டு விளையாடியுள்ளனர். விளையாட்டின் நடுவே தகராறு ஏற்பட அஷ்பக் என்பவரை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அஷ்பக்கை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த காவலர்கள், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து முக்கியக் குற்றவாளி ஒருவரைக் கைதுசெய்தனர். மற்ற இருவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகியுள்ள அவர்களைத் தேடிவருகின்றனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், விளையாட்டின் நடுவே சிறிய பிரச்னை அவர்களுக்குள் எழுந்ததாகவும், அதுவே அஷ்பக்கின் கொலைக்குக் காரணமாக அமைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய வடக்கு ஜெய்பூரின் கூடுதல் ஆணையர் சுமித் குப்தா, உயிரிழந்தவரின் தங்கை மூன்று பேர் மீது புகாரளித்தார். அதனடிப்படையில் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அஷ்பக் கொலை குறித்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '3 ஆண்டில் 3 திருமணம்'- கணவரை சுட்டுக்கொன்ற மனைவி!