ஜம்மு-காஷ்மீர் புட்கம் மாவட்டம் பாக்கர்போரா சந்தையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் இருவர், பொதுமக்கள் நான்கு பேர் காயமுற்றனர். இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சிங், ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “மதியம் 12:30 மணியளவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூட்டுக் கட்சியில் பாக்கர்போரா சந்தையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இந்தத் தாக்குதலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கான்ஸ்டபிள் சந்தோஷ்குமார், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ. குலாம் ரசூல் உள்ளிட்டோர் காயமுற்றனர். மேலும் பொதுமக்கள் நான்கு பேரும் காயம் அடைந்தனர்.
இதில் இருவர் பெண்கள். குண்டு காயம் ஏற்பட்டு, காயமுற்ற ஆறு பேரும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. இந்திய-பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் படைகள் அத்துமீறும் சம்பவங்களும் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மதுவாங்க குடை வேண்டும்...' - தகுந்த இடைவெளியில் ஆந்திரா!