இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அமைந்துள்ளது காஞ்செங்யாவோ மலை. இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையினர்கள் (ஐ.டி.பி.பி) ஒரு குழுவாக இணைந்து கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளின் வழியே இந்த மலையினை ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளனர்.
இந்த அணி வடக்குப் பகுதியிலிருந்து 1,889 மீட்டர் உயரத்தில் காஞ்செங்யாவோ மலையின் உச்சியை அடைந்துள்ளனர். 32 பேர் கொண்ட 'மிஷன் புல்கிட்' என்று அழைக்கப்படும் இந்த பயணத்திற்கு டி.சி.திக்விஜய் சிங் தலைமை வகித்தார்.
சிக்கிம் மாநில ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், அம்மாநில ஆளுநர் கங்கா பிரசாத் முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி இப்பயணம் கொடியசைத்து தொடங்கப்பட்டது. இந்த பயணம் ஐ.டி.பி.பி.யின் 213ஆவது வெற்றிகரமான மலையேறுதல் பயணமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மலையேறுதல் பயணம் தொடர்ந்து 60 ஆண்டுகளாக நடைபெற்றுவருவதாகவும் கூறுகின்றனர்.