கர்நாடக மாநிலம் கிழக்குப் பெங்களூரில் இன்று மதியம் சுமார் ஒன்றரை மணியளவில் விநோத ஒலி ஒன்று பேரிரைச்சலுடன் வெளியேறியது. இது பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம், கல்யாண் நகர், எம்ஜி.ரோடு, மாரத்தஹல்லி, ஒயிட்பீல்டு, சர்ஜாபூர், எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய பல பகுதிகளில் ஒரே சமயத்தில் இந்த ஒலியினை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஒயிட்பீல்டு பகுதி மக்கள் சோதனை நடத்திவந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மைய அலுவலர் ஜெகதீஷ், "கிழக்கு பெங்களூருவில் உணரப்பட்ட ஒலியானது நிலநடுக்கத்தால் ஏற்பட்டது அல்ல. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறிகளும் அப்பகுதிகளில் கண்டறியப்படவில்லை. நில அதிர்வுகளுக்கான எவ்வித அளவீடுகளும் அறியப்படாததால் இது எவ்வகையான சத்தம் என அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ், "ஒலி உணரப்பட்ட பகுதிகளில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை. இந்த ஒலி குறித்த தகவல்களை ஊடகங்கள் வாயிலாக சேகரித்துவருகிறோம். விமானங்களில் இருந்து ஏதேனும் ஒலி எழுப்பப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்துவருகிறோம். அவர்களது தகவலகளுக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
இது ஒருபுறமிருக்க, அப்பகுதி மக்கள் டிரான்ஸ்பார்மர் வெடிக்கும் சத்தம், குண்டு வெடித்த சத்தம், போர் விமானங்களின் சத்தம், ஒலியின் வேகத்தைவிட ஒரு பொருள் காற்றில் வேகமாக பயணித்தால் எழும் சத்தம், அம்பன் புயல் காரணமாக ஏற்பட்டிருக்கும் வளிமண்டல வெடிப்பு என தங்களது சந்தேகங்களையும், எண்ணங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தீவிரமாக இதுகுறித்து விவாதித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சத்தம் போட்டாலே நாங்க கொல்லுவோம்' - 'எ குவய்ட் ப்லேஸ் - 2' ட்ரெய்லர் வெளியீடு!