இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரகண்ட் மாநில அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது என்றும், இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது, மாகாராஷ்டிரா மாநிலம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான இந்திரா ஜெய்சிங், மாகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுப் பிரிவிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இன்னும் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
அதேபோன்று, ஜார்கண்டு மாநிலம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.பட்வாலியா, பொதுப் பிரிவினருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும், அதே வேளையில் பட்டியலின ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க முடியாத சூழலில் மாநில அரசு உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் மத்திய அரசு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மாநிலங்களின் கூற்றை மத்திய அரசு ஆதரிப்பதாகவும், அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட அமர்வு, இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.
இதையும் படிங்க : 'சமூக நீதி அமைச்சருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும்' - காங்கிரஸ்