மார்ச் 27ஆம் தேதி நாட்டு மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மிஷன் ஷக்தி என்றழைக்கப்படும் விண்வெளியில் சுற்றித் திரியும் செயற்கைக்கோளை ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கும் சோதனையில் இந்தியா வெற்றி கண்டுள்ளதாக அறிவித்தார்.
உலகில் வெறும் நான்கு நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த தொழில்நுட்பம் தற்போது இந்தியாவிடமும் உள்ளதாகவும் இதன்மூலம், தரை, கடல், வான்வழி மட்டுமன்றி விண்வெளியில் தாக்குதல் நடத்தினாலும் இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியும் என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இதனை சாதித்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டும் தெரிவித்திருந்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருந்த நேரத்தில், மோடி இவ்வாறு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றியது விதிமீறல் என்றும் விஞ்ஞானிகளின் சாதனையை வைத்து மோடி அரசியல் லாபம் தேடுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்ததையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைத்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் உரிய ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைக்காட்சி உரை தேர்தல் விதிமீறலா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று இறுதி முடிவை அறிவிக்கவுள்ளது.
முன்னதாக,தேர்தல் ஆணையம், தேசப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் தேர்தல் நடத்தை விதிகளில் வராது என விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.