தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரி ரேஷனில் அனைவருக்கும் இலவசமாக சர்க்கரை மற்றும் பொருள்களும் ஏழைகளுக்கும் ஆதிதிராவிடர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே புதுச்சேரியில் பல மாதங்களாக ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படவில்லை. அதேபோல் அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணமாக வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் சில காரணங்களால் பணமும் கடந்த சில மாதங்களாக பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் தொடர்வதால் பல நலத் திட்டங்களும் செயல்பாட்டில் இல்லை.
இதனால் மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது.
அடுத்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளதால் வரும் தீபாவளிக்கு இலவச துணி தர அரசு திட்டமிட்டது. இம்முறை தீபாவளிக்கு முன்கூட்டியே டெண்டர் விட்டு துணி தர திட்டமிட்டு கடந்த மூன்றாம் தேதி கோப்புகளை துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அரசு அனுப்பியது.
ஆனால் அவர் துணிக்குப் பதிலாக வங்கியில் பணம் செலுத்த அறிவுறுத்தினார். எனவே இவ்விவகாரம் முடிவுக்கு வராததால், இறுதி முடிவுக்காக கோப்பினை மத்திய அரசுக்கு கடந்த 9ஆம் தேதி அனுப்பினார். இது ஆளூநர் மாளிகை வெளியிட்டுள்ள கோப்புகள் ஒப்புதல் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.