மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே உள்ள மாலேமில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சண்டையின் போது, இந்திய ராணுவத்தினர் பொதுமக்கள் 16 பேரை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து சிறப்பு ஆயுதப்படையினருக்கான சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக போராளியும், மனித உரிமைகள் ஆர்வலருமான இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
தொடர்ந்து 16 ஆண்டுகாலம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை 2016ஆம் ஆண்டு முடித்துக்கொண்ட பின் அரசியலில் களமிறங்கி படுதோல்வியை சந்தித்தார். அதன்பின்னர், டெஸ்மோன்டு அந்தோணி பெல்லர்னைன் கூட்டின்ஹோ என்ற பிரிட்டிஷை சேர்ந்த நபரை 2017ஆம் ஆண்டு கொடைக்கானலில் திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து பெங்களூரு சென்ற இரோம் ஷர்மிளா, அன்னையர் தினமான நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த குழந்தைகளுக்கு நிக்ஸ் சாக்கி, ஆட்மன் தாரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாயும் குழுந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.