தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக பதவி வகித்த சாருமதி, 2019 மே 31ஆம் தேதி அன்று பணி ஓய்வுபெற்றார். அதன்பின், நிரப்பப்படாமல் இருந்த அந்த பொறுப்பிற்கு பூர்ணசந்திரன் நியமிக்கப்படுவதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி திருவாரூர் திரு.வி.க அரசு கலை கல்லூரி முதல்வர் கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கல்லூரி கல்வி இயக்குநராக உள்ளவர் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் பதவிக்கான தகுதியானவர்கள் பட்டியலை தயாரித்து இருக்க வேண்டும். ஆனால், பூர்ண சந்திரனை அப்பதவியில் நியமிப்பதற்காக காலதாமதமாக பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும், பூர்ண சந்திரனை விட சீனியரான தன்னை கல்லூரி கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும். அவரை நியமித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், "பணி மூட்டில் உள்ள கீதாவை விடுத்து பூரண சந்திரனை கல்லூரி கல்வி இயக்குநராக நியமித்ததற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும், பூர்ணசந்திரன் நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டப்படுகிறது.
இது குறித்து பதிலளிக்கும்படி உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநரகம் மற்றும் பூர்ணச்சந்திரன் ஆகியோருக்கு உத்தரவிட்டப்படுகிறது" என்றார். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதி அன்று நடைபெறும் என்று கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.