பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, ரத்தான விமானங்களுக்கான டிக்கெட் தொகையை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக திருப்பி கொடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே மாதத்தில் விமான போக்குவரத்து தொடங்கியதையடுத்து, ரத்தான விமானங்களுக்கான டிக்கெட் தொகையை இண்டிகோ வழங்கி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட் தொகை பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகையில் சுமார் 90 விழுக்காடு ஆகும்.
இதுகுறித்து பேசிய இண்டிகோவின் தலைமை நிர்வாக அலுவலர் ரோனோஜோய் தத்தா, " கரோனா பரவலை தடுத்திட அமலுக்கு வந்த ஊரடங்கால், மார்ச் மாத இறுதியில் விமான சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டாலும் மக்களின் வருகை குறைவால், ரத்தான விமானங்களுக்கான டிக்கெட் தொகையை உடனடியாக வழங்கமுடியவில்லை. தற்போது, விமான போக்குவரத்து மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. வரும் ஜனவரி 31ஆம் தேதி 2021க்குள், டிக்கெட் தொகை அனைவருக்கும் முழுமையாக திருப்பிக்கொடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் துப்பாக்கிச் சூடு... கைதானவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு?